விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் , சார்லி , பூஜா தேவரியா , தேவ் , பெய்ஜ் ஹேண்டர்ஸன் நடித்துள்ள படம் வெள்ளைப் பூக்கள். நடிகர் விவேக்கின் சியாட்டில் நண்பர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் டாக்குமென்டரி போல் எடுத்திருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தால் அதை இப்பொழுதே அழித்து விடுங்கள். படம் தரமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி விவேக் அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டிற்கு செல்கிறார். மகன் வெளிநாட்டுப் பெண்ணை மணம் முடித்திருந்ததால் ஆரம்பத்தில் பேச மறுக்கும் விவேக் மகனிடம் சமாதானம் ஆகிறார். ஆனாலும் மருமகளிடம் பேசாமல் விலகுகிறார்.
அங்கு வாழும் தமிழ் குடும்பமான சார்லி , அவரது மகளான பூஜா தேவரியாவுடன் இரண்டு குடும்பங்களும் நெருங்கிப் பழக , அவரது வீட்டருகில் இருக்கும் பெண் கடத்தப்படுகிறார். ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக இருப்பதால் அமைதியாக வீட்டில் இல்லாமல் கடத்தலை ஆராய்கிறார். அப்போது அவரது தெருவில் அடிக்கடி ஸ்கேட்டிங் விளையாடும் ஒரு வாலிபரும் கடத்தப்படுகிறார். அதையும் ஆராயும் சமயத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் வெள்ளைப் பூக்கள் படத்தின் கதை.
காவல் அதிகாரியாக விவேக் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மனசாட்சிக்குள் புகுந்து அவர் விசாரணை நடத்தும் விதம் நல்ல ரசனை. மகன் கடத்தப்பட்ட பின்பு தந்தையாக அவர் உருகி அழுகும் காட்சிகளில் நமக்கும் கண்ணீர் வந்துவிடுகிறது. படத்தின் இறுதியில் விவேக் மற்றும் குழுவினர் சொல்ல வரும் ஒற்றைக் கருத்திற்கே மொத்த பூங்கொத்தையும் கொடுக்கலாம். மகனாக தேவ் நல்ல அறிமுகம். தேவை உணர்ந்து நடித்திருக்கிறார்.
நண்பராக சார்லி நீண்ட நாட்களுக்குப் பிறகு விவேக் , சார்லி இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இயல்பான நடிப்பில் மனதில் நிறைகிறார் சார்லி. விவேக்கின் மருமகளாக பெய்ஜ் ஹேண்டர்ஸன் அசத்தலான நடிப்பு. பக்கத்து வீட்டுக்காரராக வரும் பாகிஸ்தானி , கொடூர தந்தை என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிறைகிறார்கள்.
ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு நம்மை சியாட்டிலின் கொள்ளை அழகை கண்ணுக்குள் நிறுத்துகிறது. ப்ரவீன் கே.எல் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ராம்கோபால் கிருஷ்ணராஜ் இசை படத்திற்கு பக்கபலம். வெள்ளைப்பூக்கள் இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் பார்க்க வேண்டிய விறுவிறுப்பான திரில்லர்.
அமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை. கிளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர். சமூக அக்கறையுள்ள கதையும் கூட.